காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது- அரசாங்கம்

343 0

புதிய அரசியல் யாப்பின் கீழ் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்பு பேரவை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

காணி அதிகாரம் முழுமையாக காணி ஆணைக்குழுவிற்கே வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் காவற்துறை அதிகாரம் என்பது முழுமையாக காவற்துறை ஆணைக்குழுவிற்கு பாரப்படுத்தப்படும்.
எனினும் மாகாணத்துக்கு பொறுப்பான காவற்துறையை கட்டுப்படுத்துவதற்கான சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அரசியல்யாப்பின் வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளமையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த கருத்தை நேற்றைய அரசியலமைப்பு பேரவை விவாதத்தில் வைத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து குறித்த இடைக்கால அறிக்கையை ஆதரித்து முன்நகர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்பு பேரவையின் இரண்டாம் நாள் விவாதம் இன்றும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment