அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தினம்

478 0

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்திய மலையகத்தின் சிரேஷ்ட தலைவரான, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.

சிரார்த்த தின நிகழ்வுகள் பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதி முன்றலில் இன்று காலை நடைபெற்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம்,
கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமான சௌமிய பவனிலும் அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, ஹட்டன் – கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் பயிற்சி நிலையத்திலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

பதுளை மாவட்டத்தில் ஶ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பதுளை மாவட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அஞ்சலி நிகழ்வை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி செயலாளருமான ரி.வி.செங்கன் ஒழுங்கு செய்திருந்தார்.

Leave a comment