இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மரண தண்டனை கைதியொருவர் பல்கலைக்கழக முதுநிலை உயர் பட்டப்படிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதாகச் சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கனாயக்க தெரிவித்துள்ளார்.
துணை பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய இந்திக்க பமுனுசிங்க எனும் இக்கைதி தனது தேர்வுப் பரீட்சையினை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை சிறப்பு நிலையமொன்றில் எழுதவுள்ளதாக சிறைச்சாலையின் தலைமை அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சிறையிலிருந்தே களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றுக் கொண்ட குறித்த கைதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ள அனுமதி கோரியதாகவும், அதற்குச் சிறைச்சாலைகளின் ஆணையாளர் அனுமதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த கைதி உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காலத்தில் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசிக்கும் மொஹமட் ஷியாம் எனும் வர்த்தகரின் கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.