நாட்டில் சிறந்த சமயப் பின்னணியினை ஏற்படுத்துவதன் ஊடாகவே விழுமியப் பண்புகளையுடைய சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (30) மாத்தளை, மில்லவான மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகம் பூராகவும் காணப்படும் தேரவாத, மகாயான, தந்திரயான, வஜ்ரயான மற்றும் சென் பௌத்த மதப் பிரிவுகளை சேர்ந்த இளம் பிக்குமார் 1000 பேரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இந்த மாநாடு இலங்கையில் 3வது முறையாக நடைபெறுகின்றது.
ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமான 14 வது வருடாந்த மாநாட்டின் நிகழ்வுகள், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கண்டி பல்லேகல மாகாண சபை மாநாட்டு மண்டபம் என்பவற்றில் இடம்பெற்றன.
இன்று மாத்தளை, மில்லவான மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அதன் நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, மானிட சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம், புரிந்துணர்வு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு நாட்டில் சிறந்த சமய பின்னணி காணப்பட வேண்டுமென தெரிவித்தார்.
மனிதன் சமயத்திலிருந்தும் தர்மத்திலிருந்தும் விலகும்போது அவனிடமுள்ள மனிதாபிமானமும் நற் பண்புகளும் இல்லாமற் போவதுடன், சமூகம் அழிவை நோக்கிப் பயணிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமய, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சமயக் கோட்பாடுகளினால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிக முக்கியமானவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மில்லவான பிரதேசத்திற்கு அரச தலைவர் ஒருவர் சமூகமளித்த முதல் சந்தர்ப்பத்தை நினைவுகூரும் முகமாக மில்லவான மகா வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார, தம்புல்லை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பிரியான் விஜேரத்ன உள்ளிடோர் இந்த நிறைவு விழாவில் பங்குபற்றினர்.