இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுகளுக்கிடையில் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு நீதி அமைச்சர் தலதா அத்துகோரள கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நீதி அமைச்சில் கைச்சாத்திட்டதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது சம்பந்தமாக ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்துக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு சார்பில் அந்நாட்டு நீதி அமைச்சர் அலி ராஸா அவாசி அந்நாட்டில் இருந்து கைச்சாத்திட்டுள்ளார். அத்துடன் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள கைச்சாத்திட்டார்.
அத்துடன் நீதி அமைச்சர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதனையடுத்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமத் ஸாரி அமிரானி மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இதேவேளை, சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைப்பதில்லை. மாறாக இந்த கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதே அடிப்படையில் தங்களின் தாய் நாட்டில் சிறைச்சாலைகளில் அனுபவிக்கவேண்டிவரும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார் த்தை கடந்த மாதம் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஈரான் தூதுவர் மொஹமட் ஸாரி அமிரானி ஆகியோருக் கிடையில் இடம்பெற்றது.