புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொள்கை ரீதியான தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டுமென பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். வலியுறுத்தி வந்திருந்த நிலையில் நடைபெற்றிருந்த ஒருங்கிணைப் புக் குழு கூட்டத்தில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பதற்காக கூட்டமைப்பிற்குள் இணக்கப்பாடுகளை எட்டுவதற்காக எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை மீண்டும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான கூட்டமொன்று கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் அது நடைபெற்றிருக்கவில்லை. இதன்போதே கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். தமது கட்சி இடைக்கால அறிக்கை தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளமையால் பாராளுமன்றக் குழுவில் ஆராய்வதற்கோ அல்லது விளக்கமளிப்பதற்கோ முன்னதாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கூட்டி கொள்கை ரீதியான முடிவொன்றை எட்டவேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
இவ்வாறான நிலையில் புதிய அரசியல மைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் காலை 9.30 மணியிலிருந்து மாலை வரையில் இருநாள் கருத்தரங்கொன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இரு தலைவர்கள் பங்கேற்கவில்லை
எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை யில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப் பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அதன் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா எம்.பி., அக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ரெலோ சார்பில் அக்கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கோவிந்தன் கருணாகரம், சுரேன், ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் எம்.பி., ராகவன் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பில் அதன் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மற்றும் இரா.துரைரெட்ணம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் வலியுறுத்தல்
ஈ.பி.ஆர்.எல்.எப். ஏற்கனவே வெளிப்படுத்திவந்தமைக்கு அமைவாக, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது கட்சியினால் முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தோடு ஒன்றிப்பதாக இல்லை. ஆகவே அதனை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியலமைப்பு சார்ந்த நிபுணர்கள், புத்திஜீவிகள், ஊடகத்தரப்பினர் இடைக்கால அறிக்கை தொடர்பில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிகாட்டியுள்ளனர். அவ்வாறான நிலையில் நாம் இடைக்கால அறிக்கையை எந்தவகையில் ஆதரிக்க முடியும்? அதில் உள்ள விடயங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் கூறமுடியும்?
தற்போதைய நிலைமையில் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் எதுவுமே இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைபெற்றிருக் கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் எம்மால் செல்ல முடியாதவொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகக்குறைந்தது வீதி புனரமைப்பு விடயத்தினை கூட நிறைவேற்ற முடியாத சூழலே உள்ள நிலையில் நாம் இடைக்கால அறிக்கையை மையப்படுத்தி செயற்பட முடியாது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் சபையில் கால அவகாசத்திற்கான அனுமதியை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். அதில் அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அரசியல் கைதிகள் போராடுகிறார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் வீதியில் உள்ளார்கள்.
காணிகளை விடுவிக்குமாறும் மக்களே போராடுகின்றார்கள். இவ்வாறு மக்கள் தாமாகவே முன்வைந்து போராட்டங்களை முன்னெடுக்கின்றபோதும் அதற்கான தீர்வுகளைக் கூட வழங்க முடியாத நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
ஆகவே அரசாங்கத்திற்கு எல்லாவற்றுக் கும் ஆதரவளித்துக்கொண்டு இருப்பது பொருத்தமான செயற்பாடாக தெரியவில்லை என்று கூறப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் பதில்
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலை வர் மாவை.சோ.சேனாதிராஜா, ஊடகங்க ளில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்றன. அவை அனைத்தையும் மையப்படுத்த முடியாது. தற்போது இடைக்கால அறிக்கையொன்றே வந்துள்ளது. ஆகவே அரசியலமைப்பின் அடுத்த கட்டச் செயற்பாடுகளின் போது எமது கோரிக்கைகளை மேலும் வலுவானதாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தெற்கிலும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அணியினர் அரசியலமை ப்பு செயற்பாடுகளை குழப்புகின்ற நிலையில் நாம் ஏற்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தினை சிதைத்துவிட முடியாது. இறுதிவரையில் முயற்சித்துப்பார்க்க வேண்டும். சர்வதேச மும் தற்போது கூடிய அக்கறை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுமந்திரன் எம்.பி., அரசி யல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் குறித்து தெரிவித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் அமைப்பது தொடர் பில் தாம் வழங்கிவரும் அழுத்தங்களை விளக்கியுள்ளார். அத்துடன் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு தான் முற்போக்கான விடயங்களை அங்கீகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புளொட்டின் நிலைப்பாடு
இதனையடுத்து, புளொட் தரப்பில், புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. இருப்பினும் தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் இவ்விடயம் தொடர்பாக பெரிதாக கரிசனை கொண்டிருப்பதாக தெரியவில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியினரே இவ்விடயம் தொடர்பாக பேசுகின்றனர். தமிழ் மக்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே தற்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.
புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை மட்டும் காரணம் காட்டி, நாம் மக்களின் அன்றாட தேவைகள் எதிர்பார்ப்புக்களை கைவிட முடியாது. அதுதொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை நாங்கள் குழப்பியவர்கள் என்ற நிலைமையை ஏற்படுத்தாமல் இயலுமானவரையில் இறுதி வரை முயன்று பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
ரெலோவின் இறுதியான முடிவு
ரெலோ அமைப்பும் புதிய அரசியலமை ப்பு தொடர்பில் இறுதிவரையிலான முயற்சினை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் தற்போது ஏற்பட்டுள்ளன. ஆனால் தமிழீழ விடுதலை இயக்கமானது ஒருமித்த நாடு என்பதற்கு பதிலாக ஐக்கிய இலங்கையில் இணைந்த வடகிழக்குடனான தீர்வொன்றையே ஏற்றுக்கொள்ளும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பு செய்ய முடியாது என வலியுறுத்தியுள்ளது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படுவதே சிறந்ததாக அமையும். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய சிந்தனையுடைய கட்சிகளை இணைத்துக்கொள்வதற்கு கொள்கையளவிலான இணக்கம் ஏற்படுமாகவிருந்தால் அதனை நாம் அங்கீரிப்போம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்
இதனையடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் அதுகுறித்த ஆயத்தங்கள், வட் டார முறைமை என்பதால் ஆசன ஒதுக்கீ டு கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண் டியுள்ளதாக ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு பங்காளிக்கட்சிகளும் பேச்சுக்களை தொடுத்திருந்தன. ஏற்கனவே ஒருங்கிணை ப்புக்குழு கூட்டம் ஆரம்பித்து ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்திருந்த நிலையில் அவ்விடயம் குறித்து பிறிதொரு தினத்தில் கலந்துரையாடுவதே பொருத்தமாக இருக் கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் குறிப்பிட்டதையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி வவுனியாவில் உள்ளூரா ட்சிமன்ற தேர்தல் குறித்து கலந்துரையா டுவதற்காக மீண்டும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கூட்டுவதென்ற இணக்கப் பாட்டின் அடிப்படையில் மேற்படி கூட்டம் நிறைவு பெற்றது.
தலைவர் பங்கேற்காமைக்கு ரெலோவின் காரணம்
ரெலோ அமைப்பின் தலைவர் செல் வம் அடைக்கலநாதன் எம்.பி. பங்கேற்கா மைக்கான காரணத்தினை அவ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவே அவரால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாது போனதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.