மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்பரம் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின் றார். அதில் திருப்தி கண்டதால் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் 10 ஆயிரம் வீடுகளை வழங்க முன்வந்துள்ளார் என ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனி வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் “எங்கள் நிலத்தில் – எங்கள் வீடு” என்னும் தொனிப் பொருளில் இடம்பெற்றது. நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், வடிவேல் சுரேஷ், வேலு குமார், கே.கே. பியதாஸ, சுஜித் பெரேரா, அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம் உதயகுமார், சிங். பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, எம். ராம். ஆர். இராஜாராம் “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உற்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பேசுகையில்,
1993 ஆம் ஆண்டில் டி.பி. விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தேன், எனினும் முடியாமற் போய் விட்டது. இன்று 20 வருடங்களின் பின்னர் அந்தத் திட்டம் நிறைவேறி வருகின்றது. எமது நல்லாட்சி அரசாங்கத்தில் மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு திகாம்பரம் அமைச்சராக நியமிக்கப்பட்டு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்து வருகின்றார். அதில் 2864 குடும்பங்களுக்கு இன்று காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப் படுவது மகிழ்ச்சியான விடயம் ஆகும்.
எத்தனையோ அரசாங்கங்கள், அமைச்சர்கள் வீடுகளைக் கட்டித் தருவதாகவும், காணிகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் கூறினார்கள். ஆனால், யார் பெற்றுக் கொடுத்தார்கள்? திகாம்பரம் அமைச்சரான பிறகு அதை நடைமுறையில் செய்து காட்டி வருகிறார். எமது வீடமைப்புத் திட்டம் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதை மலையகத்துக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். அதன் பயனாக மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சத்தியக் கடதாசி மூலம் 1986 இல் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தாயகம் திரும்பியோர் போக எஞ்சியிருந்தவர்களுக்கும் பிரஜாவுரிமை கிடைத்தது. எனவே, இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களுக்கு காணி பெறுகின்ற உரிமை இருக்கின்றது. இந்த நாட்டில் ஏனைய மக்களுக்கு இணையாக அவர்களும் வாழ வேண்டும். அவர்களின் வாழ்க்கை மேம்பாடு காண வேண்டும்.
இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு 2015 இல் தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் மக்கள் ஆணை வழங்கியுள்ளர்கள். அதன் அடிப்படையில் ஐ.தே.கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி மலர்ந்துள்ளது. மகிந்த ஆட்சியை நீக்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டு வந்துள்ளார்கள் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தது போல, மக்களும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றி அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் இடம்பெற்று வந்த 30 ஆண்டு கால யுத்தம் முடிவுகுக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் சமாதானத்துடன் அமைதியாக வாழ வேண்டும்.
உலகத்தில் உள்ள ஒரேயொரு பௌத்த நாடு இலங்கை ஆகும். நாம் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ வணக்கதலங்களை அபிவிருத்தி செய்து வருகின்றோம் ஒவ்வொருவரது கலை கலாசார விழுமியங்களை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மொழிப் பிரச்சினை பிரிவினைக்கு வழி வகுத்து விடக் கூடாது. இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பொது மக்கள் வழங்கிய வரத்தினை கொண்டு இம்மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
அன்று மொழி பிரச்சினை இருந்ததால் தனிநாடு பிரச்சினை உருவாகியது. இதனால் 30 வருட யுத்தத்திற்கும் நாம் முகம்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம். புதிய அரசியல் யாப்பு ஊடாக இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக அனைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றன.
இந்த உயர்வான நிலை நாம் வரவேற்கின்றோம். கிடைத்திருக்கும் மக்களின் ஆணைக்கேற்ப அரசியல் யாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். சந்தர்ப்பங்களை பிரயோசனப்படுத்தவேண்டும்.
புதிய அரசியல் அமைப்பு பற்றி பலவாறு விமர்சனம் செய்து வருகின்றார்கள். யாரும் நாட்டைப் பிரிக்க முயலவில்லை. புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு அல்ல. நாம் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்றார்.