மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்து, அதனை இலாப நோக்கமற்ற புதிய நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு பதிலாக வரவுள்ள நிறுவனம், உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளதாகவும் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பீடம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியினாபல் நியமிக்கப்பட்ட குழுவினால், அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவபீட பீடாதிபதிகள் உட்பட பல தரப்பினர்களிடமிருந்து யோசனைகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டும் சகல தரப்பினருக்கும் நியாயமாகவும் அரசாங்கத்தின் கொள்கைக்கு மாற்றம் இல்லாமலும் நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைட்டம் பிரச்சினை காரணமாக தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றி, மீண்டும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவது காலத்தின் தேவையாகும். சகல தரப்பினருக்கும் நீதியான தீர்வொன்று என்ற அடிப்படையில் கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அனைத்து தரப்பினருக்கும் நீதியான தீர்வு ஒன்றை எடுத்தல் என்ற மூலதர்மத்தின் அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
1. சைட்டம் நிறுவனத்தினை (தற்போதிலிருந்து சைட்டம் என்று இனங்காண்பது அதன் மருத்துவ பீடமாகும்) இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தற்போதிருக்கின்ற பங்குதாரர்கள்¸ கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சைட்டம் மருத்துவ பீடத்தின் அனைத்து நடவடிக்கைகள் முகாமைத்துவம் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற¸ புதிய நிறுவனத்தினை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்கின்ற வகையில்¸ சைட்டம் நிறுவனத்தில் காணப்படுகின்ற உரிமம் மற்றும் முகாமைத்துவ கட்டமைப்பு என்பவை இல்லாதொழிக்கப்படும்.
இங்கு¸ வைத்தியர் நெவில் பிரனாந்து மற்றும் அவரது குடும்பத்தார் உரிமையுடன் இலாபநோக்கத்துடன் முன்னெடுத்து வந்த நிறுவனம் இல்லாதொழிக்கப்படுகின்றது.
2. இப்பங்குதாரர்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தத்தின் மூலம் சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள்¸ பொறுப்புக்கள்¸ பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்பில் காணப்படுகின்ற ஆகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் (சட்டமயமாக்கப்பட வேண்டும்) ஸ்தாபிக்கப்படவுள்ள மருத்துவ பட்டமளிக்க முன்மொழியப்பட்டுள்ள புதிய, அரச சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும். (செலவினை மிஞ்சிய இலாபம் பெறப்படும் போது அதனை பங்குதாரர்களிடத்தில் பிரித்துக் கொள்ளாது நிறுவனத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு அல்லது மாணவர்களுக்கு பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தல்வேண்டும்)
3,இந்நோக்கத்துக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற நிறுவனத்தினை ஸ்தாபிப்பதற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச சார்பற்ற¸ இலாப நோக்கமற்ற தரப்பினர்களுடன் அரசாங்கம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் விருப்பம் தெரிவிக்கின்ற தரப்பினர்களுடன் மிகவும் துரித கதியில் தொடர்பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4,தேவையான தகைமைகளை கொண்ட¸ தற்போது சைட்டம் நிறுவனத்தின் மூலம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள சகல மாணவர்களையும் புதிய நிறுவனமானது ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்தாபிக்கப்பட உள்ள புதிய நிறுவனத்தினுள் இம்மாணவர்களுக்கு மருத்துவ கல்வியினை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
4,சைட்டம் நிறுவனத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்¸ அது தொடர்பில் நீதிமன்றம் முன்வைத்துள்ள தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு¸ இலங்கை மருத்துவ சபையின் ஆலோசனையின் அடிப்படையில் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சைட்டம் நிறுவனத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சிபார்சு செய்யப்படுகின்ற அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும்.
6, உயர் கல்வி அமைச்சின் செயலாளரினால் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் சைட்டம் நிறுவனத்துக்கு புதிதாக மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதனடிப்படையில்¸ இதன் பின்னர் அனைத்து புதிய அனுமதிகள் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பான ஆகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் (சட்டமாக்கப்பட வேண்டும்) ஸ்தாபிக்கப்பட உள்ள முன்மொழியப்பட்டுள்ள புதிய நிறுவனத்தினால் (மேற்கூறப்பட்ட 02ம் இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மாத்திரமே முன்னெடுக்கப்படவேண்டும்.
குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களில் தகைமைகள் பூர்த்தியாகின்ற மாணவர்களுக்கு வகுப்புக் கட்டணங்களுக்காக செலவிடப்படுகின்ற தொகையினை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி நிதி நிறுவனங்கள் மற்றும் சலுகை அடிப்படையிலான மாணவர் கடன் திட்டங்களின் மூலம் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து வசதிகளும் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.
7,புதிய நிறுவனத்தின் உரிமை மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்காக சைட்டம் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் தொடர்புபடக் கூடாது. இது தொடர்பில் வைத்தியர் நெவில் பிரனாந்து மற்றும் அக்குடும்பம் வழங்குகின்ற ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும்.
8, இலங்கை மருத்துவ சபை¸ சட்டமாதிபர் மற்றும் ஏனைய உரிய பங்குதார்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் இலங்கை மருத்துவ சபை முன்வைத்த சட்டமூலத்துக்கு அமைவாக மருத்துவ கவ்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான ஆகக் குறைந்த தரமானது சுகாதார அமைச்சின் மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட உள்ளதுடன்¸ பின்னர் அவை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இது இன்றிலிருந்து கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்.
மேலும் பின்வரும் ஒழுங்கு முறையின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.
1,ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான ஆகக் குறைந்த தரமானது சுகாதார அமைச்சின் மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுதல் மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.
2, உத்தேசிக்கப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற நிறுவனத்துக்கு சொத்துக்கள்¸ பொறுப்புக்கள்¸ பணியாளர்கள் மற்றும் மாணவர்களை ஒப்படைப்பதற்காக சைட்டம், தெரிவு செய்யப்பட்ட தரப்பினர் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தத்துக்கு வருதல்.
3, உயர் கல்வி அமைச்சின் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் புதிய நிறுவனத்தினை ஸ்தாபித்தல்.
4,சைட்டம் நிறுவனத்தினை இல்லாதொழித்தல்: சைட்டம் நிறுவனத்துக்கு உரித்தான சொத்துக்கள்¸ பொறுப்புகள்¸ பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் புதிய நிறுவனத்துக்கு ஒப்படைத்தல்.
5,மருத்துவ பட்டத்தினை வழங்கும் புதிய¸ இலாப நோக்கமற்ற நிறுவனத்தினை ஆரம்பித்தல்
மேற்கூறப்பட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பதற்காக உயர் மட்டத்திலான அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை துரித கதியில் நியமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முழு செயன்முறையும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.