தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ். மரியாதை

384 0

குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை கடந்த 28-ந்தேதி தொடங்கியது.

முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2-வது நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-வது நாளான இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் முன்னிலையில் விழா தொடங்கியது.

குருபூஜையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். தொடர்ந்து நினைவிடம் மற்றும் அங்கு தங்க கவசத்தில் ஜொலித்த முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 8.44 மணிக்கு தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி. மாவட்ட கலெக்டர் நடராஜன், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரிய சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, நேரு, சத்தியமூர்த்தி, பெரிய கருப்பன், மாவட்ட செயலாளர் திவாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் அ.தி.மு.க. அம்மா அணி, பா.ம.க., தே.மு.தி.க., ம.தி. மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.

மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலும் அமைப்பின் நிர்வாகிகள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அந்த அமைப்பின் சார்பில் பசும்பொன்னில் 2-வது நாளாக இன்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடம் வந்து மரியாதை செலுத்தினர். முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் வந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானங்கள் மூலம் பசும் பொன், கமுதி உள்ளிட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பல் வேறு இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Leave a comment