வங்கக்கடல் பகுதியில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இந்த வருடம் 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 28-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையையொட்டி நிலைகொண்டுள்ளது. மேலும் வடகிழக்கு காற்றும் வலுப்பெற்று விளங்குகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் 2 நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும்.
இப்போது பொதுமக்கள் வசதிக்காக எங்கள் இணையதளத்தை திறந்தால் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவும், வருகிற 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை நிலவரமும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும், மாவட்டம் வாரியாக வாரம்தோறும் மழை அளவும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.