தமிழுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பு 2015-16 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஓராண்டுப் படிப்பாக இருந்து வந்தது. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரைப்படி 2015-16 ஆம் ஆண்டு முதல் பி.எட். படிப்பு 2 ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
தமிழ் பாடம் நீக்கப்பட்டு இருப்பதன் மூலம் தமிழையும், தமிழ் மொழிப் பாடங்களையும் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. எனவே தமிழுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.