இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று (திங்கட் கிழமை) முக்கிய முடிவு அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று (திங்கட் கிழமை) முக்கிய முடிவு அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி. தினகரன் அணியினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.
வேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி.மு.க. இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால், டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் அவகாசம் கேட்டும், தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்கவில்லை. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஆனால், டி.டி.வி. தினகரன் தரப்பில் 13-ந் தேதி விசாரணையை 21-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் 16-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. அன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற 2-ம் கட்ட விசாரணையில் இரு அணி தரப்பிலும் நிர்வாகிகள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அதன்பின்னர், 3-ம் கட்ட விசாரணையை 23-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்தியது.
இதில், எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் மத்திய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் முகுல் ரோத்தகி, வக்கீல் சேதுராமன் ஆகியோர் ஆஜரானார்கள். டி.டி.வி.தினகரன் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜரானார்கள். எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், “அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 95 சதவீத உறுப்பினர்கள் எங்களிடம் தான் உள்ளனர். எங்களுக்குத்தான் பெரும்பான்மை அதிகம் உள்ளது. இரட்டை இலை சின்னத்தையும் எங்களுக்கே ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
டி.டி.வி.தினகரன் அணி தரப்பில், “எங்களுக்கு அதிகப்படியான உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். அதனால், எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் கமிஷனர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை 30-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது.
விசாரணையில் பங்கேற்பதற்காக, எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். டி.டி.வி.தினகரன் அணி தரப்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களில் 10 பேரும், 6 எம்.பி.க் களும் டெல்லி சென்றுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, இன்று நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, தேர்தல் ஆணையமும் தனது முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. இரு அணிகளில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றப்போவது யார் என்ற பரபரப்பும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களே உண்மையான அ.தி.மு.க.வாக கருதப்படும். கட்சியின் பெயர், அலுவலகத்தை பயன்படுத்தும் உரிமையும் கிடைக்கும்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியும் உடனடியாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், ஒரு வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் முன்னதாக, நேற்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் தேர்தல் ஆணையம் முன்வைத்த அனைத்து ஆவணங்களையும், பிரமாண பத்திரங்களையும் சமர்ப்பித்துவிட்டோம். அதன் மீது எங்களுடைய விவாதமும் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையம் கோரிய எந்த ஆவணமும் சமர்ப்பிக்கவில்லை. தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதால் முழுமையான விவாதங்களில் ஈடுபட முடியவில்லை. இதில், தோல்வியை சந்திக்கப்போவது உறுதி என்பதால், காலதாமதம் செய்வதற்காக முயற்சிக்கின்றனர்.
ஆனால், தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விவாதம் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாததால் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி வாய்தா வாங்குகின்றனர். அவர்களுக்கு எந்தவித வெற்றி முகாந்திரமும் இல்லை. அவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் போலியானவை.இவ்வாறு அவர் கூறினார்.