ஷேக் ஹசீனா கொலை முயற்சி – 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை

461 0
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின்  தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மறைவுக்கு பின்னர் அவரால் வழிநடத்தப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவராக ஷேக் ஹசினா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஷேக் ஹசினாவை கொலை செய்வதற்கான 19 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், கடந்த 1989 ஆம் ஆண்டு ஷேக் ஹசினா மீது அவரது வீட்டில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 2009ஆம் ஆண்டில் பங்களாதேஷ்; விடுதலை கட்சியை சேர்ந்த 16 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்றது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஷேக் ஹசினாவை கொலைசெய்ய முயன்ற மற்றுமொரு வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment