இந்த நிகழ்வு இன்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மக்களுக்கு 2 ஆயிரத்து 864 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனிடையே இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்னண், மலையகத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொருளாதாரம் நிலை தொடர்ந்தும் பின்தங்கியே உள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் தமது கட்சியில் எதிர்காலத்தில் எக்காரணத்தை கொண்டும் பிளவு ஏற்படாது என தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டை பிளவுப்படுத்தல் அல்லது மக்களின் மொழி உரிமை மத உரிமை உள்ளிட்டவை பாதிக்கும் வகையில் அரசியலமைப்பு திட்டம் உருவாகிவிட கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட்டுவதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாவே அரசியல் அமைப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நாட்டு மக்களின் ஆணைக்கமைவாகவே புதிய அரசியலமைப்பை உருவாக்க, அரசியல் கட்சி என்ற ரீதியிலும் நாடாளுமன்றம் என்ற ரீதியிலும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டு தீர்கமான முடிவு எடுக்கப்படும்
புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீல் பீரிஸ், திஸ்ஸ வித்தான போன்றோர், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலப்பகுதியில் 13ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் அரசியலமைப்பை சீர் செய்ய முயற்சி செய்தனர்.
இருப்பினும் அது அவர்களால் முடியவில்லை.
நல்லாட்சியை உருவாக்கிய பொது மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத நிலையில், புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் தற்போது அமைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.