அந்தக் குற்றச் சாட்டை மழுங்கடிக்க இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் உயிர்கள் கொக்குவிலில் பொலிசாரின் துப்பாக்கி களால் காவு கொள்ளப்பட்டன.
வட மராட்சியில் கள்ள மண் ஏற்றுபவர்களிடம் பொலிசார் கப்பம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உச்சம் பெற்றபோது துன்னாலை இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது.
வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பை உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில் நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. தற்போது அரசமைப்பு விவாதம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளபோது, மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு அரங்கேறியுள்ளது.
அரியாலையில் ஓர் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது. வடக்கைத் தொடர்ந்தும் பதற்றத்தில் வைத்திருந்து அரசியல் செய்யும் முயற்சியின் சதியா இது? என்று கேள்விகள் பலவும் எழுந்துள்ளன. ஏனெனில் இலங்கை அரசியலில் புரையோடிப்போயுள்ள சூழ்ச்சிகள், தந்திரங்கள் இன்றுவரை அகலவே இல்லை.
படைகள் எவ்வழியோ அரசு அவ்வழி
தமிழ் மக்கள் நிம்மதியாகவோ அல்லது நிரந்தரத் தீர்வுடனோ வாழக் கூடாது என்பதில் ஆட்சியேறும் அரசுகள் என்றுமே உறுதியாகவுள்ளன.
இந்த விடயத்தில் அவை ஒற்றுமையாகச் செயற்படுகின்றன. காலத்துக்குக் காலம் அரசியல் ரீதியிலோ அல்லது இராணுவ ரீதியிலோ சரி தமிழர் தரப்புக்கு ஒரு படி முன்னேற்றம் ஏற்படுவது தென்பட்டால், அதனை மழுங்கடிப்பதற்காகச் சிங்கள தேசம் பூதாகாரமான ஏதாவது ஒரு விடயத்தினைக் கிள்ளிவிடுவது வழமை.
அதைக் கனகச்சிதமாக நிகழ்த்திய பலரே ஆட்சியிலும் நிலைக்கிறார்கள். அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி என்பர். எமது நாட்டில் படைகள் எவ்வழியோ ஆட்சியாளர்களும் அவ்வழியே என்ற மரபே பின்பற்றப்படுகிறது.
அதாவது அரசியல் தீர்வில் தமிழர்களுக்குச் சமஉரிமைகள் கிடைக்க கூடாது என்பதில் இணைந்தே சதிசெய்கின்றனர்.
ஏனெனில் வடக்கில் குறிப்பாக 2015 மற்றும் 2016களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள்வெட்டுக் கலாச்சாரம் தலைதூக்கியது. அப்போது அதனை அடக்க வேண்டிய பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.
அத்தோடு அந்தக் குழுக் களுக்கும் பொலிசாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
சூடுகளும் பின்னணியும்
வாள்வெட்டை அடக்கவேண்டிய தேவை எழுந்ததன் விளைவாக 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி இரண்டு பல்கலைக் கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். அது நடந்து ஓர் ஆண்டு கடந்து விட்டது. இருந்தும் வாள்வெட்டுக்கும் தீர்வில்லை. சுட்டுப்படு கொலை செய்யப்பட்டவர்களுக்கும் நீதியில்லை.
வாள்வெட்டுப் பேச்சுக்களும் மங்கின. காரணம் அந்தச் சூட்டின் பிரதிபலிப்பே. அடுத்து மணல்கொள்ளை, மணல் தட்டுப்பாடு என்பன பூதாகார மாகின. சிலரிடம் பொலிசார் கப்பம் பெற்று மணல் கடத்த அனுமதிக்கின்றனர் எனக் குடத்தனை மக்கள் பகிரங்கமாகவே குற்றமும் சாட்டினர்.
அதன் விளைவாக இந்த ஆண்டின் ஜுலை மாத ஆரம்பத்தில் குடத்தனை இளைஞன் ஒருவர் சுடப்பட்டார். பின்னர் நீதிபதி இளஞ்செழியன் தொடர்புபட்ட அந்தச் சூடு, கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி நடந்தது. மக்கள் அனைவரின் கவனமும் இதன்பால் மட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது, கடந்த ஒக்ரோபர் 22ஆம் திகதி அரியாலை –உதயபுரம் பகுதியில் இளைஞர் சுடப்பட்டிருக்கிறார். இது சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் புதிய அரசமைப்பு விமர்சனங்களைக் குறைப் பதற்காக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
மண்டைதீவில் தேடுதல்
அண்மைய சூட்டில் கொல்லப்பட்டவர் பற்றி வெளிவரும் செவிக்கதைகளில் அரச படையினரே இதை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேநேரம் இங்கு அரசுகள் மாறுகின்றன, தவிர முப்படைகளின் தளபதிகள் மாற்றப்படுகின்றனர், ஆனால் படையினர் மகிந்த காலத்தில் இருந்த படையினரே.
தற்போதும் உள்ளனர். இலங்கையில் தற்போது சுமார் 2இலட்சத்து 50ஆயிரம் இராணுவச் சிப்பாய்கள் உள்ளனர். இந்தச் சூட்டு விடயத்தில் கடற்படையினரே சந்தேகிக்கப்படுகின்றனர்.
அண்மையில் மண்டைதீவுக் கடற்படை முகாமில் தேடுதல் நடத்தப்பட்டது இதனாலேயே. போர் ஓய்ந்து பணிகள் இல்லாமலிருக்கும் இவர்களை வைத்தே அதிக சதிகள் அரங்கேற்றப்படுகின்றன என்று தற்போது பொதுவெளியில் விசனங்கள் வெளி வருகின்றன.
தீர்வுகளில் முரண்போக்கு
ஆரம்பத்தில் ஒரு அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முற்படுகையில் ஒரு தரப்பு பாதயாத்திரை சென்று அதை இல்லாமல் செய்ததும், அதேபோன்று ஒரு தரப்பு தீர்வை முன் வைக்க, மறுதரப்பு அதைக் கிழித்தெறிந்து, தீயிட்ட நிகழ்வுகளும் உள்ளன.
இரண்டு பெரும் கட்சிகள், மாறி மாறி எதிர்த்த கட்சிகள் இன்று ஒன்று சேர்ந்து சிறுபான்மை மக்களின் மனதைப் புரிந்து, நல்லதொரு தீர்வை வழங்குவார்களா அல்லது இரண்டு கட்சி களும் இணைந்து சதுரங்க விளையாட்டு விளையாடி ஒற்றுமையாகச் சண்டை
பிடித்து இப்போதும் அதைக் குழப்பிக் கொண்டே இருக்கிறார்களா என்கின்ற சந்தேகம் பலமாகிவிட்டுள்ளது.
அரசமைப்புத் தீர்வில் எதாவது கிடைக்குமா எனக் காத்திருக்கும் தமிழர்களைத் திசைதிருப்பி, இளையோர்களை ஆத்திரமூட்டி மீண்டும் ஓர் இளைஞர்கள் அழிப்புக்கு வித்திடுகிறார்களோ என்றுகூடச் சந்தேகங்கள் எழாமலில்லை.
ஏனெனில் இங்கு நடக்கும் ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும் போராட்டம், கதவடைப்பு என இளைஞர்கள், மக்கள் அந்தப் பக்கமே திசை திருப்பப்படுகிறார்கள்.
சட்டமா அதிபரின் விநோதம்
இலங்கை அரசியலில் என்ன இடம்பெறுகின்றது என எவருக்குமே விளங்காத நிைலமை காணப்படுவது வழமைதான். நாட்டின் ஜனநாயகம் , மற்றும் பாதுகாப்பு, எவற்றில் எவர் அதிகாரம் கொண்ட முடிவை எடுக்கின்றார் என்பதில் மூடிய ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது.
இங்கே அரச தலைவரை மிஞ்சிய முடிவை எடுக்கும் சட்டமா அதிபர் இவ்வாறு இடம்பெறும் சூட்டுக் கொலைகள் தொடர்பில் வாய் திறப்பதே கிடையாது. அல்லது அதற்குச் சட்ட நடவடிக்கையும் கிடையாது.
சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லை எனக்கூறி வவுனியாவில் இடம்பெறும் அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றத்துடிக்கும் சட்டமா அதிபர் இங்கே ஒரு மாகாணத்தின் மக்களே பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று வினாவினால், பதில் பூச்சியமாகவே உள்ளது.
அண்மைய சூடு ஆரம்பத்தில் மண்டைதீவுக் கடற்படையினர் பக்கம் கவனத்தைத் திருப்பியது. குறித்த சம்பவத்தினை நடத்தியது கடற்படையினர்தான் எனப் பேச்சுக்கள் எழுந்தன. அங்கு தேடுதலும் நடத்தப்பட்டது.
இந்தச் சூடு ஒரு முச்சக்கர வண்டியில் சென்று நடாத்தப்பட்டிருக்கிறது. சுட்ட பின்பு ஓடிச் சென்று வெற்றுத் தோட்டாக்களைப் பொறுக்கி எடுத்த பின்பு மீண்டும் அதே முச்சக்கர வண்டியில் ஆயுததாரி தப்பிச் செல்லும் காட்சி துரதிஸ்ட வசமாக அருகில் உள்ள சி.சி.ரி கமராவில் பதிவாகியிருக்கிறது.
அந்த முச்சக்கர வண்டியானது பாதுகாப்பு அமைச்சின் பதிவில் உள்ளதாகவும். அது சிறப்பு அதிரடிக் படையினருடையது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, இந்தச் சூட்டையும் படைத்தரப்பே மேற்கொண்டுள்ளது என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.