கடந்த வருடத்தில் 113 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 28 பேர் இருதய நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு தொடர்பான அறிக்கையினை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டது.
ஆசிய வலயத்தில் கர்ப்பிணித்தாய்மார்கள் இறப்பு மிகவும் குறைந்த நாடாக இலங்கை கடந்த வருடம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததுடன், கடந்த வருடம் மாத்திரம் 3,34,821 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் குழந்தைகள் பிறப்பு, இறப்பு வீதமானது இலட்சத்துக்கு 33.7 வீதம் என்றும், குறித்த மரணங்கள் இலங்கையின் பின்தங்கிய பகுதிகளிலே நிகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நிமோனியா மற்றும் இரத்த சோகையினால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும், கிராமங்கள் மற்றும் பெருந்தோட்டப் பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 35 வயதுக்கு குறைவான பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.