யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமின் கழிவுகள் நேரடியாகவே தனியான குழாய் வழியாகப் பண்ணைக் கடலுக்குள் செலுத்தப்படுவது தொடர்பில் எவருமே கண்டுகொள்ளவில்லையென அந்தப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிரடிப்படை முகாமின் கழிவுகள் அதன் அருகே உள்ள ஒரு வெற்று நிலப்பரப்புக்குள் தொட்டி கட்டப்பட்டு விடப்பட்டு அதனூடாக நேரடி யாகவே தனியான குழாய் வழியாகப் பண்ணைக் கடலுக்குள் செலுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் இரகசியமான முறையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது.முகாமின் கழிவுகள் அனைத்தும் நிலத்துக்குக் கீழான குழாய் மூலம் மதகு வழியாகக் கொண்டுவரப்பட்டு கடலினுள் செலுத்தப்படுகிறது.அதிலிருந்து எழும் துர்நாற்றம் சகித்துக்கொள்ள முடியாதளவு உள்ளது. மலக் கழிவுகளும் இதன் மூலம் அகற்றப்படுகின்றதா எனக் கருதுமளவுக்கு அந்தக் கழிவுகளில் இருந்து பெரும் துர் நாற்றம் எழுகின்றது.
‘‘இதனால் அந்தக் கடற்கரைப் பிரதேசம் மாசடைவது மட்டுமன்றி கடலுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை அண்டிய பகுதியின் ஊடாகவும் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்கின்றனர். அவர்களுக்குத் தோல் நோய்கள் தொற்றும் அபாயமும் ஏற்படுமோ என அஞ்சத்தோன்றுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் என்பனவும் இதே பண்ணைப் பகுதியிலேயே அமைந்துள்ளன. ஆனால் இதனை மட்டும் கண்டுகொள்ள மாட்டார்கள்’’ என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாநகர சபையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”இவ்வாறு கழிவுகளை கடலுக்குள் செலுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை. தற்போது சுட்டிக்காட்டப்படு வதால் அது தொடர்பில் உடன் ஆராயப்படும்” என்றனர்.