இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை அரசியல்வாதிகளுக்கு வழங்கவில்லையென, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அத்துடன், வடகிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து முதன்முறையாக இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு உறுப்பினர் ஆ.யதீந்திரா, அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக கல்முனை சிவில் சமூக உறுப்பினர் து.இராமச்சந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 30ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.
இணைந்த வடகிழக்கு பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் என்னும் வரலாறு மறுக்கப்படாமல் இருப்பதற்காகவும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் இனப் பரம்பலை செயற்கையாக மாற்றியமைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்காகவும், கிழக்கின் மீது வலிந்து திணிக்கப்படும் மத ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவும், கிழக்கில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளினால் உருவாகியுள்ள பெருமளவான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் போராளிகளுக்கும் தங்களது வாழ்வாதாரங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், கிழக்கில் சீரழிந்துள்ள கல்வித் தரத்தினை கட்டியெழுப்புவதற்காகவும், கிழக்கின் கலை, கலாசார, பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காகவும், கிழக்கின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காகவும், அரசியல் அதிகார பலத்துடன் நடாத்தப்படும் காணி சூரையாடல்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், கிழக்கு மக்களை அரசியல் அநாதைகளாக்கும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவும், இந்த வடகிழக்கு இணைப்பு அவசியம் என்பதனை சிவில் சமூக அமைப்பு என்ற ரீதியில் இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. அவை அரசியல் யாப்பு திருத்தக் குழுவின் தலைவராகவுள்ள பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் எதிர்க்கட்சி தலைவர், ஐநா மற்றும் சர்வதேச நாடுகளின் தூதுவராலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சிவயோநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, வடகிழக்கு இணைப்பு என்பது புதிய விடயம் அல்ல எனவும், அது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்டது எனவும், அது சர்வதேச உடன்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதுடன் தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்படும் தீர்வானது வடகிழக்கு இணைந்ததாகவே முன்வைக்கப்பட வேண்டும் என்பதே சிவில் சமூக அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கையென திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு உறுப்பினர் ஆ.யதீந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இது ஏனைய சமூகத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையல்ல என தெரிவித்த அவர், தமிழ் தேசிய மக்கள் வடகிழக்கு இணையாத தீர்வினை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகிழக்கு இணைப்பு அல்லாத தீர்வினைப் பெறுவதற்கான எந்த ஆணையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கோ வழங்கப்படவில்லை.
இந்தியாவினால் உருவாக்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்த அடிப்படையிலேயே எண்ணைக்குதம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகின்றது.
வடகிழக்கு இணைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவுக்கும் உள்ளதாகவும் இங்கு கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு உறுப்பினர் ஆ.யதீந்திரா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக கல்முனை சிவில் சமூக உறுப்பினர் து.இராமச்சந்திரனும் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.