தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்ந்த மண்ணில் இன்று உயிர் வாழவே முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதை நெற்றிப்பொட்டில் அறையும் விதமாகவே அரியாலை துயரம் நிகழ்ந்தேறியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…
நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதிவரை அதற்காக போராடினோம் முடியவில்லை… போகிறோம். எமக்கான நியாயத்தினை பெற்றுக்கொடுங்கள் என்று கச்சிதமான வார்த்தைக்குள் எமது கையாலாகத்தனத்தை இடித்துரைத்துச் சென்றுள்ளது இவர்களின் அவலச்சாவு.
குடும்ப நண்பர் ஒருவரின் தொழில் முயற்சிக்காக தனது சொந்த வீட்டை விற்றும் கடன்பட்டும் உதவிசெய்தவரும் அவரைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலை செய்து மாண்டுபோயிருக்கும் துயரமானது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நம்பவைத்து ஏமாற்றியவர்கள் சுதந்திரமாக வாழும் நிலையில் ஏமாற்றப்பட்டவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளமையானது இருந்திருக்க வேண்டியவர்கள் இல்லாததன் அருமையை உணர்த்தியுள்ளது. நம்பிக்கை மோசடியால் பாதிக்கப்பட்ட இந்த இளம் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலான பொறிமுறைகள் இல்லாத நிலையே இவர்களை இவ்வாறான விபரீத முடிவை எடுக்கத்தூண்டியுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
இறந்தவர்கள் மீண்டுவரப்போவதில்லை. அவர்களை நம்பவைத்து ஏமாற்றி இன்று சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து ஏமாற்றிய தொகையை மீட்டு இறந்தவர்கள் பெயரில் நம்பிக்கை மோசடியின் பெயரால் சுமத்தப்பட்டிருக்கும் கடனை அடைப்பதன் மூலம் அவர்களின் ஆத்மாக்களையாவது ஆறுதல்படுத்த முடியும். அத்துடன், இவ்வாறான மோசடியாளர்கள் மீண்டும் எமது மண்ணில் தலையெடுக்காது தடுக்க முடியும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து செயற்பட்டு நீதியை நிலைநாட்ட தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இத்துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவிற்கனா தூதுதரங்கள் மூலம் அவர்கள் குறித்த தகவல்களை அனுப்பி சம்பந்தப்பட்ட அரசுகள் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைப்பதற்கான முயற்சிகளை எனது எல்லைக்குள்ளாக மேற்கொள்ளவுள்ளேன். ஆகவே, அவர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக தெரியப்படுத்தவும். இவ்வாறு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.