தேசிய பாடசாலைகளில், ஒரே பாடசாலையில் சுமார் 10 வருடங்களுக்கும் மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் பெறுவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 353 தேசிய பாடசாலைகளில், சுமார் 37 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர். இவர்களில் 12 ஆயிரம் பேர் ஒரே பாடசாலையில், சுமார் 10 வருடங்களுக்கும் மேல் சேவையாற்றியுள்ளனர். இவ்வாறான ஆசிரியர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒக்டோபர் 12 முதல் வேறு தேசிய பாடசாலைகளுக்கு, கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அரசின் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கமைவாக, ஆசிரியர் இடமாற்ற சபையின் உதவியுடன் மாகாண மட்டத்தில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய பாடசாலைகளில் சுமார் 10 வருடங்களுக்கும் மேல் ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றும் தேசிய திட்டத்தின் கீழ், ஒரு தொகுதி ஆசிரியர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு, கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், இவ்வருடம் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் புதிய இடமாற்றப் பாடசாலைகளில் கடமையேற்று, அதுகுறித்து அமைச்சுக்கு அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன், சுமார் 3 ஆயிரம் உடற்பயிற்சி ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கொண்டு வருகின்றார்