சோமாலியா: உணவகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி

289 0

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள ஒரு பிரபல உணவகம் மீது இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் இரண்டு கார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். பின்னர், மேலும் பல தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த மோதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அந்த உணவகத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment