விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பா.ஜனதா கட்சியினரின் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குறித்தும் தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த நாகரீகமற்ற கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் பா.ஜ.க.வினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது மிகக்கொடூரமான வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா கட்சியின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.