நெடுஞ்சாலைத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகள் துவக்கம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தஞ்சாவூர் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் நோக்கில், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு வழித்தட தஞ்சாவூர் புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதன்மூலம், தஞ்சாவூர் நகருக்கான சுற்றுச்சாலை முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
இப்புதிய புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதால், தஞ்சாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களிலிருந்து தஞ்சாவூர் வழியாக மாநிலத்தின் பிற இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் பயணதூரம் மற்றும் பயணநேரம் வெகுவாக குறையும்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் புறவழிச்சாலையில் ஆலக்குடியில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், திருவெண்ணைநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலம்; என மொத்தம் 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புறவழிச்சாலை, ஒரு இரயில்வே மேம்பாலம் மற்றும் ஒரு ஆற்றுப்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் கோதண்டராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.