தண்ணீரில் சாம்பல் படிவதால் சாப்பிட முடியவில்லை என குறை கேட்ட நடிகர் கமல்ஹாசன் காலில் விழுந்து பெண் கண்ணீர் விட்டார்.
எண்ணூர் சென்ற நடிகர் கமல்ஹாசன் செப்பாக்கம் கிராமத்தில் பொது மக்களிடம் குறை கேட்டார்.
அப்போது சரவணி என்ற பெண் கண்ணீர் மல்க குறைகளை கூறி கமல்ஹாசனின் காலில் விழுந்து கும்பிட்டார். தனது காலில் விழ வேண்டாம் என்று கமல்ஹாசன் தடுத்தார்.
அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் பற்றி பெண்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் அனல்மின் நிலைய சாம்பலை கொண்டு வந்து கொட்டுவதால் வீட்டில் வசிக்க முடியவில்லை. குடிக்கும் தண்ணீரில் சாம்பல் படிந்து விடுகிறது. இதனால் ஆஸ்துமா நோய் வருகிறது. வீடெல்லாம் உப்பு பிடிச்சு போச்சு. கழுவினாலும் பிசுபிசு என இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்வதால் எப்போதும் தூசி மயமாக உள்ளது.
குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. பள்ளிக்கூடம் இல்லை என்று அடுக்கடுக்காக புகாரை தெரிவித்தனர்.
நாங்கள் பிறந்து வளர்ந்தது இங்குதான். 82-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஊர் அப்படியே உள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லை. வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வரும். சாம்பல் தூசி தெருவிலும், வீட்டிலும் பறந்து கொண்டே உள்ளது. இதனால் எங்களுக்கு சரியாக சுவாசிக்க முடியவில்லை. உடலில் கொப்பளம், அரிப்பு ஏற்படுகிறது. காற்றில் சாம்பல் பறக்காமல் இருக்க தினமும் 6 பேர் ரோட்டில் தண்ணீர் தெளித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதுவரை எந்த அரசியல் வாதிகளும் இங்கு வந்து பார்க்கவில்லை. இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களால் சாப்பிட முடியவில்லை. சாப்பாட்டில் சாம்பல் விழுகிறது என்றனர். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது:-
இந்த பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு பற்றி எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அதனால் நான் பார்க்க வந்தேன். இது அரசியல்வாதிகள் பார்க்க வேண்டிய வேலை என்று கூறினார்.
“நான் சாதாரண நடிகன்தான். இங்குள்ள குறைபாடுகள் தெரியவந்ததால் உங்களை சந்திக்க வந்துள்ளேன். எந்தெந்த ஏரியாவில் பாதிப்பு உள்ளதோ அங்கெல்லாம் சென்று பார்வையிடுவேன். என்னால் முடிந்த உதவியை செய்வேன்.இன்னும் 2, 3 நாளில் இப்பகுதிக்கு மீண்டும் வருவேன் என்றார்.