விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் புதிய இனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளின் மூலமாக 3 வகைப் பயிரினங்கள் கண்டறியப்பட்டு தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும் பல இனங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மாகாணப் பிரதி விவசா யப்பணிப்பாளர் அ.செல்வராசா மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய விவசாய பயிர் இனங்களைப் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சலைத் தரக்கூடிய விவசாயப் பயிர்களைப் பயிரிடுவதில் ஆர்வமாக உள்ளனர். நாம் புதிய இனங்களை விவசாயிக ளுக்கு அறிமுகம் செய்து அவற்றை பரீட்சார்த்த நடவடிக்கையின் பின்னர் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றோம்.
நடப்பு வருடத்தில் இதுவரை மூன்று வகை யான விவசாயப் பயிர்களை அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறான புதிய இனங்களை வெளியிடங்களில் இருந்து பெற்றுக்கொடுப்பதற்குச் செலவு அதிகம்.
எனினும் இழைய வளர்ப்பு மூலமாகப் பெறப்பட்ட “கவண்டிஸ் “ இன வாழைப்பழச் செய்கை பெரும் வெற்றியளித்துள்ளது. இது வாழை ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு மிகச் சிறிய அளவில் காணப்படும்.
அது 10 மாத காலத்தில் அதிக எடையுள்ள குலைபோடும். எந்தவித நோய்த் தாக்கத்துக்கும் உள்ளாகாத வாழைமரமாக இது காணப்படுகிறது.
பழம் சிறிது வளைந்த, பச்சை நிறமாகக் காணப்படுகிறது. இதனால் பொதி செய்து ஏற்றுமதி செய்வது சுலபம். இதன் விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயிகள் இந்த வகை வாழை மரத்தை அதிகம் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளனர்.
வடக்கில் பல விவசாயிகள் இதனைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இது தவிர அதிக விளைச்சல் தரக்கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதுமான புதிய இன மிளகாய் மற்றும் சோளம் விதைகளையும் அறிமுகம் செய்துள்ளோம்.
இதில் சிறப்பான அம்சம் நாட்டில் உள்ள “மகா இலுப்பல்லம, “ஆராய்ச்சி நிலையத்தில் இந்த விதைகள் கண்டுபிடிக்கப்பட்டமை.
இவற்றைப் பரிசீலித்துப் பார்ப்பதற்காக அண்மையில் நடைபெற்ற தேசிய உணவு உற்பத்தி வார நிகழ்வில் வைத்து நூறு பேருக்கு வழங்கியுள்ளோம்.
அதனைத் தற்போது விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். விளைச்சலின் பின்னர் அவை பார்வையிடப்பட்டு அது பயனுள்ள விதைகளாக இருந்தால் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப அதனை அதிகமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.