ஆட்சியைப் பிடிக்க மகிந்தவும் அவரது அணியினரும் புதிய அரசமைப்புத் தொடர்பிலும், வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
இதற்கு வலுச்சேர்ப்பது போல் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுக் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை நடைபெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தைப் புறக்கணித்தார். ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என்று அறிவித்திருந்தனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:
மகிந்த அணியினர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காகப் புதிய அரசமைப்புத் தொடர்பிலும், இடைக்கால அறிக்கை தொடர்பிலும் பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களின் அரசியல் மீள்பிரவேசத்துக்காக நாட்டு மக்களை குழப்புகின்றனர். விசமத்தனமான கருத்துக்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.அரசியல் தீர்வு வரக்கூடாது என்று கருதுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் மகிந்த அணிக்கு ஒத்தூதும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் தமிழ் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். புதிய அரசமைப்பு, இடைக்கால அறிக்கை தொடர்பில் எடுத்துக்கூறவேண்டும்.
தற்போது வெளிவந்திருப்பது இடைக்கால அறிக்கை மாத்திரமே என்பதையும், புதிய அரசமைப்பு அல்ல என்பதையும் புரியவைக்கவேண்டும்என்றார்.
அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.ஒருமித்த நாடு என்கின்ற பதத்துக்கான பொருள்கோடல் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.அதிகூடிய அதிகாரப் பகிர்வை ஒருமித்த பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே கோருவதாகவும் இரா.சம்பந்தன் அங்கு குறிப்பிட்டுள்ளார்.