சிலாபம், மாதம்பை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் 30 வயதான பெண் ஒருவரையும் முச்சக்கரவண்டி சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பெண் வழங்கிய தகவலுக்கமைய, இன்று இரண்டாவது சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
அவர் தற்காலிகமாக வசித்துவந்த மாதம்பேயிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.
நீர்கொழும்பு சிறையலிலுள்ள கைதி மற்றும் கொழும்பிலுள்ள ஒருவரின் வழிநடத்தலில், இவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, ஒன்றரை கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை உள்ளிட்ட இரண்டு பேர் வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையின் பயணப்பொதிக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 669 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது , அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.