அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் அசண்டையீனமாக இருந்து வருகின்றது.
அரசிற்கு எதிராகவும் அதே நேரம் அரசுற்கு ஆதரவாக செயற்படுகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து பொது அமைப்புக்கள் மற்றும் ஆசிரிய சங்கங்கள் உட்பட அரசியல் கட்சிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்த கலந்துரையாடல் நேற்று மாலை யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலின் முடிவில் அதன் பிரதிநிதிகள் நடத்திய ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளது கோரிக்கைகளை நிறைவேற்றி அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானத்தினடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
இதற்கமையவே போராட்டங்களை முன்னெடுத்ததுடன் ஹர்த்தாலையும் நடாத்தியிருந்தோம்.
ஆனாலும் அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையே தற்போதும் காணப்படுகின்றது.
இதனால் தான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம்.
இதற்கமைய தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
அரசிற்கு எதிராகவும் அதே நேரம் அரசிற்கு ஆதரவை வழங்கி வருகின்ற அல்லது அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அரசியற் கைதிகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக நாங்கள் பலரும் இணைந்து முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு சகலரும் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.