பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு அருகே உள்ள ஜைத்பாஸ் பகுதியில் ஒரு போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
பக்ரைன் நாட்டின் ஒரு சில பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அந்நாட்டின் தலைநகரான மனாமா அருகே தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் பக்ரைன் போலீஸ் வாகனம் ஒன்று நேற்றிரவு சென்றுகொண்டிருந்தது.
அப்போது தீடிரென அந்த வாகனம் மீது கையெறி குண்டுவீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின்னர் அந்த வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் போலீஸ் வாகனம் பலத்த சேதம் அடைந்தது.
இதில் சுமார் 9 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் ஒரு போலீஸ்காரர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். இந்த செய்தியை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள புதையா சாலையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து போலீசார் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.