பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத குழுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத குழுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பாகிஸ்தான் மண்ணில் உள்ள அவர்களின் மறைவிடங்களை நிர்மூலமாக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். எங்களின் எதிர்பார்ப்புகளை பாகிஸ்தானிடம் பல முறை சொல்லி விட்டோம். தங்கள் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத குழுக்கள் மீது அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், “என்ன செய்ய வேண்டும் என்பதை பாகிஸ்தானிடம் கூறி விட்டோம். நீங்கள் இதை செய்யுங்கள் என்று கூறி இருக்கிறோம். நீங்கள் ஒரு இறையாண்மை நாடு. என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். என்ன தேவை என்று நாங்கள் நினைக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால், நாங்கள் எங்கள் வியூகங்களை மாற்றிக்கொள்கிறோம். எங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வேறு வழிகளை பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட நிலையில், இப்போது வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.