ஸ்பெயினில் இருந்து பிரிந்துவிட்டதாக கேட்டாலோனியா பாராளுமன்றம் அறிவிப்பு

259 0

ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா பாராளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா இன்று அதிகாரப்பூர்வமாக தனி நாடாகி விட்டதாக அறிவித்துள்ளது.

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா, தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கேட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கேட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய கார்லஸ் பூஜ்டியமோன்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் தனிநாடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ஸ்பெயின் அரசு உடன் பேசி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

இது கேட்டலோனியா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், தனிநாடாக பிரிவது குறித்து பரிசீலனை செய்து ஐந்து நாட்களுக்குள் முடிவை அறிவிக்குமாறு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியிருந்தார். பிரிந்து செல்வதென்றால் அந்த முடிவை பரிசீலிக்க மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் உறுதியாக இருந்தால் 19-ம் தேதி கேட்டலோனியா அரசு கலைக்கப்படும் என மரியானோ ரஜாய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஸ்பெயின் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 155-ன் படி ஸ்பெயின் அரசுக்கு கேட்டலோனியா பாராளுமன்றத்தை கலைக்கவும், ஸ்பெயினின் நேரடி ஆளுமையின் கீழ் கேட்டலோனியாவை கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

கார்லஸ் பூஜ்டியமோன்ட் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்காத சூழ்நிலையில், கேட்டாலோனியா அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு அங்கு நேரடி ஆட்சியை கொண்டு வர ஸ்பெயின் தீர்மானித்தது.

எனினும், கேட்டாலோனியா அரசை சஸ்பெண்ட் செய்யும் மசோதா செனட் சபையில் நிறைவேற வேண்டும் என்பதால், அந்த சபைக்கு ஸ்பெயின் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் கேட்டாலோனியா அரசு கலைக்கப்படலாம் என்ற நிலை காணப்பட்டது.

இந்நிலையில், ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டாலோனியா பாராளுமன்றம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு பின்னர் இந்த அறிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை கேட்ட கேட்டாலோனியா தனிநாடு ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனிநாடாக பிரிந்து விட்டதாக கேட்டாலோனியா பாராளுமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஸ்பெயின் அரசு கேபினட் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளது.

Leave a comment