நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, விவசாய பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 1.11.2017 முதல் 31.3.2018 வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 5,780 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.