டோனி மகளை சிறப்பு விருந்தினராக வரவேற்றுள்ளது திருவாங்கூர் கோவில் நிர்வாகம்

362 0

அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடல் பாடிய கிரிக்கெட் வீரர் டோனியின் 2 வயது மகளை திருவிழாவின் போது சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில் உள்ளது. கேரளாவில் புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘அத்வைதம்’ என்ற திரைப்படத்தில், ‘ அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு நீ’ என தொடங்கும் பாடல் இடம் பெற்றிருந்தது. பாடகர் என்.பி.குமார் பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டோனியின் 2 வயது மகள் ஸிவா, இந்த பாடலை பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. டோனியே இதை படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயிலும் உலகளவில் பிரபலமாகி விட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாவின் போது டோனி மகள் ஸிவாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில் குறித்த பாடலை டோனியின் மகள் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், கோயிலும் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. எனவே, ஜனவரி 14-ம் தேதி கோயிலில் நடக்கும் 12 களபம் திருவிழாவின் போது டோனி மகளை அழைத்து கவுரவிக்க தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.

Leave a comment