அனுராதபுரம் – புத்தளம் வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சகோதரியர் இருவர் பலி

278 0

அனுராதபுரம் – புத்தளம் வீதியில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் சகோதரியர் இருவர் பலியாகினர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

உயிரிழந்த இரு பெண்களும் நொச்சியாகமையைச் சேர்ந்த சகோதரிகள். கடினமான குடும்பச் சூழலிலும் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கியதுடன், அப்பகுதியின் முதல் பட்டதாரிச் சகோதரிகள் என்ற பெருமையையும் பெற்றிருந்தனர்.

பட்டப்படிப்பை முடித்த மூத்த சகோதரி ஜயனி ஸ்வேதா ஜயகொடி வடமத்திய மாகாண மருத்துவ அமைச்சின் கணக்குத் தணிக்கைப் பிரிவிலும், இளையவரான சமாதி நவோத்யா ஜயகொடி ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தனர்.

எப்போதும் ஒன்றாகவே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள், சம்பவ தினத்தன்றும் வேலைக்காக ஒன்றாகவே வீட்டில் இருந்து கிளம்பினர். எனினும், அதுவே அவர்களது இறுதிப் பயணமாகவும் அமைந்தது.

அவர்கள் அனுராதபுரம் – புத்தளம் வீதியின் புலத்குலம பகுதியை அண்மித்த வேளை, எதிரில் வேகமாக வந்த லொறியொன்று மோதி இருவரும் தூக்கியெறியப்பட்டனர்.

குறித்த லொறியானது, கால்நடைகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றுகொண்டிருந்ததாகவும், அந்த லொறியை பொலிஸார் துரத்திச் சென்றதாலேயே லொறி அதிவேகமாகப் பயணித்ததாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

விபத்தின் பின் குறித்த லொறியும் குடை சாய்ந்தது. லொறி சாரதியை மக்கள் நையப்புடைத்தனர். எனினும், பின்னால் வந்த பொலிஸார் சாரதியை கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்களிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எப்படியோ… முயற்சியும் திறமையும் கொண்ட இரண்டு இளம் பெண்களின் கனவுகள் பாதியிலேயே கலைந்தது நொச்சியாகம பகுதி மக்களைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment