யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வடக்குப் பகுதியில் புதிதாக தொழிநுட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தரமான தொழில் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தொழில் நுட்பகல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்விகளை யாழ்பாணம் தொழிநுட்ப கல்லூரி வழங்கி வருகின்றது.
இங்கே கற்கை நெறிகளை தொடர்வதற்கான சுமார் 8,000 பேர் விண்ணப்பிப்பதாகவும் இருப்பினும், தொழில் நுட்பக் கல்லூரியில் 1500 பேருக்கு மாத்திரமே பயிற்சிகள் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கவனத்தில் கொண்டு மீசாலை வடக்கு பகுதி மற்றும் வலிகாமம் பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய தொழில் தகுதி 3 ஆம் 4 ஆம் மட்டத்திலான தொழிற்பயிற்சி கல்லூரிகள் முன்னெடுப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 560 மில்லியன் ரூபா செலவில் இந்த தொழில் நுட்பக்கல்லூரி அமைக்கப்படவிருக்கின்றது.
இதனை 2 வருட காலத்திற்குள் அமைப்பதற்கு ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.