கோர்ட்டு உத்தரவை மீறி கட்அவுட்: அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

264 0

கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் உயிருடன் இருப்பவர்கள் பெயரில் கட்அவுட், பதாகைகள் வைத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உயிருடன் இருப்பவர்களுக்கு கட்அவுட் மற்றும் பதாகைகளை அமைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு அடுத்த நாளே அதுகுறித்த விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு அருகிலும், திருச்சியிலும் அரசு விழாவுக்காக விதிகளை மீறி ஏராளமான கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அரசு விழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்காக கட்அவுட்கள், பதாகைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்அவுட்களோ, பதாகைகளோ அமைக்கக் கூடாது என்றும், இந்த உத்தரவை தமிழக அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டுமென்றும் ஆணையிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சென்னையில் மட்டுமின்றி திருச்சியிலும் மீறப்பட்டது. திருச்சியில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக திருச்சி நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாழும் தலைவர்களுக்கு கட்-அவுட் அமைக்கக்கூடாது; பொது இடங்களில் சுவர்களை அசுத்தப்படுத்தக் கூடாது என்பது தான் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஆகும். அந்தத் தீர்ப்பு குறித்த செய்தி நேற்று முன்நாள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது; நேற்றைய நாளிதழ்களிலும் விரிவாக வெளியிடப்பட்டிருந்தன.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராசன், வளர்மதி, துரைக்கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெயர்களில் பதாகைகளும், கட்-அவுட்களும் அமைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திருச்சி வந்துள்ள முதல்வர், துணை முதல்வரும் இவ்விதிமீறலை கண்டு கொள்ளவில்லை.

திருச்சியில் பொது மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தவர்கள் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்அவுட்கள், பதாகைகள் வைத்திருப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுக்கு துணை போகும் அநீதியான செயலாகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் உயிருடன் இருப்பவர்கள் பெயரில் கட்அவுட், பதாகைகள் வைத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மீதும், அதை தடுக்கத்தவறிய தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment