கலில் நோட்டம் விட்டு இரவில் கைவரிசை காட்டிய நூதன கொள்ளையனை அம்பத்தூர் பகுதியில் அவனை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறி, கொள்ளை, திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் ஜெயிலுக்கு சென்றும் திருந்தாமல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு ஜாமீன் இல்லாமல் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அப்படியும் திருந்தாவிட்டால் என்ன தான் செய்வது?
அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் விவேகானந்தா பள்ளி எதிரில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை வழி மறித்து சோதனை செய்தனர். வேனில் கடப்பாறை, கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்தனர்.
இதையடுத்து டெம்போ வேன் டிரைவர் சையத் சர்ப்ராஸ் நவாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த 30-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்கில் தேடப்பட்ட திருடன் என்பது தெரியவந்தது.
நவாஸ் 7 முறை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கொள்ளையன். சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு நூதன கொள்ளையில் இறங்கி விடுவது வழக்கம். இந்த முறை வெளியில் வந்ததும் முதலில் டெம்போ ஒன்றை திருடி இருக்கிறான்.
பகல் நேரத்தில் அந்த டெம்போவில் சென்று சிசிடிவி கேமரா இல்லாத பகுதி எது? எந்த கடைகளில் கொள்ளையடிக்கலாம் என நோட்டம் போடுவது, பின்னர் நள்ளிரவில் அந்த பகுதிக்கு சென்று கடை முன்பு டெம்போ வேனை யாருக்கும் சந்தேகம் வராமல் நிறுத்தி விட்டு கடைகளில் பூட்டை உடைத்து பொருட்களை எல்லாம் டெம்போவில் ஏற்றி சென்று விடுவது தான் அவனது யுக்தி.
இதே பாணியில் கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் என சென்னையில் பல்வேறு பகுதியில் தனது கைவரி சையை காட்டியுள்ளான். கொள்ளையடித்த பொருட்களை விற்று தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் லட்சக்கணக்கில் வங்கியில் பணம் சேமித்து வைத்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நவாசை போலீசார் கைது செய்து மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.