பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐக்கியதேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மாதிவெலப் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிபென்டர் வாகனம் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதென கடந்த செவ்வாய்க்கிழமை ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தனர்.
அத்துடன் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த தகட்டிலக்கம் பொய்யானது எனவும், அந்த வாகனம் போக்குவரத்து ஆணையகத்தின் வாகனப்பிரிவில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு ரஞ்சன் ராமநாயக்க உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோரின் கூற்றுப் பொய்யானதெனவும் இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்த மகிந்தானந்த அளுத்கமகே 500 மில்லியன் இழப்பீடு கோரி கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.