பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 78 தமிழ் இளைஞர்களின் வழக்குகளை எதிர்வரும் 15ஆம் திகதி மீள் பரிசோதனைக்குட்படுத்துமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பரிசீலனைக்குட்படுத்தப்படாத வழங்குகள் அனைத்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றும்போது பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஆலோசனை பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தண்டனைகளை குறைக்கும் முகமாக 3 வழக்குகள் இந்த மாதம் பரிசோதிக்கப்படும் என்றும் டி.எம். சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.