கட்டார் நாட்டின் மன்னர் தமீம் பின் அஹமட் அல்தானி அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுநாள் அரச முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (24) இரவு டோஹா நகரில் உள்ள ஹமட் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
இந்நிலையில் , கட்டார் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்டார் நாட்டின் பொருளாதார, வர்த்தக அமைச்சர் செய்க் அஹமட் பின் யாசின் பின் மொஹமட் அல்தானி உள்ளிட்ட அந்நாட்டின் விசேட பிரதிநிதிகள் வரவேற்றனர்.
கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் ஜனாதிபதியை வரவேற்க பிரசன்னமாகியிருந்தனர்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி தங்கியிருக்கும் உணவகத்திலும் விசேட வரவேற்பு நிகழ்வொன்று தூதரக அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தனது இரண்டுநாள் பயணத்தில் ஜனாதிபதி, கட்டார் நாட்டின் மன்னர், பிரதமர் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதிக்கும் அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை – கட்டார் வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளதுடன், கட்டார் நாட்டின் இஸ்லாமிய தொல்பொருள் நிலையத்தையும் பார்வையிடவுள்ளார்.
சுமார் 140.000 இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் கட்டார் நாட்டில் பணிபுரிகின்றனர். கட்டார் நாட்டில் உள்ள இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.