முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை இவ்வாரம் அளவீடு செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், காணி உரிமையாளர்களின் ஒப்புதல் பெறாமல் அடாத்தாக சுவீகரிக்கப்பட்ட குறித்த காணிகளை மீட்க வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டார்.
பொதுமக்களிற்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகள் பொதுத்தேவைக்கு என அடையாளப்படுத்தப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சுவீகரிக்கப்பட்டிருந்தது.
காணி சுவீகரிப்பு விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் காணி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தியும் உள்ளார்.
மேற்படி காணிகளை கடற்படையினருக்கு வழங்க மறுத்துவரும் மக்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இணைந்து காணி அளவீட்டிற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் காணி உரிமையாளர்களின் ஒப்புதலின்றி காணி சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு காணிகளை இழந்துள்ள மக்கள் தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாம் சொந்த காணிகளின்றி உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலங்களை இழந்துள்ளதால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலைவெளியிட்டுள்ளனர்.