அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற 3 அரசியல் கைதிகள் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த அரசியல் கைதிகள் இன்று 31ம் நாளாகவும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களது வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை மற்றும் போதைவஸ்த்துக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பாடு ஒன்றை வழங்கும் வரையில் அவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிட மாட்டார்கள்என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.