தமது உபாயங்களுக்குள் அனைவரும் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்த கருத்து தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விமல் வீரவங்ச கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
எந்தவகையிலாவது பிரிவினை அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் நாடாளுமன்றத்தில் 3இல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் நாடு பாரிய இன்னல்களை சந்திக்கும்.
இதற்கு 76 பேர் வாக்களிப்பதை தடுக்கவேண்டும்.
இல்லையென்றால் மறுநாள் நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இவ்வாறு குறிப்பிட்;டார்.
சிங்களம் தெரியாத அரசியல் சிறுபிள்ளை தனமானவர்களுக்கு ஒன்றும் விளங்காது.
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாமல் போகும்.
இவ்வாறான நாடாளுமன்றம் இருந்தும் பலனில்லை.
அதனையே குண்டு தாக்குதல் கதை மூலம் தெரியப்படுத்தினேன், தவிர உண்மையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொருள் இல்லை.
இந்த நிலையில் குண்டு தாக்குதல் என்று பொருள்பட கருத்து வெளியிட்டால், அதுதொடர்பில் அனைவருக்கும் முக்கிய கவனம் செலுத்துவார்கள்.
அப்போது புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக மேலும் தீவிரமாக செயற்பட முடியும் என தான் கருத்தியதாகவும், தமது பொறிக்குள் அனைவரும் சிக்கியுள்ளதாகவும் விமல் வீரவங்க குறிப்பிட்டார்.
இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்ட அறிவிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் ஊடகப் பிரிவு நேற்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த அறிவிப்பு குறித்து, முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், ஏனைய தரப்பினராலும் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பித்தவுடன், குறித்த அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.