உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்தவருடம் ஜனவரி மாதத்தில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை 10 ஆக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இணைத் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது
இதறகமைய, நுவரெலியா பிரதேச சபையின் எண்ணிக்கையை மூன்றாகவும், அம்பகமுவ பிரதேச சபையின் எண்ணிக்கையை மூன்றாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வலப்பனை பிரதேச சபையின் எண்ணிக்கையை இரண்டாவும், கொத்மலை பிரதேச சபையின் எண்ணிக்கையை இரண்டாகவும் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்தவாரம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.