தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ம் லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வு-சுவிஸ்

12630 0

சுவிசில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப் பலியான பெண் போராளி
2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 30வது ஆண்டு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி உட்பட்ட 5 மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த வணக்க நிகழ்வானது 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கிறபுன்டன்; மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம,; மலர்வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலிஇ சுடர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் வணக்கப் பாடல்கள் இசைக்கலைஞர்களால் காணிக்கையாக வழங்கப்பெற்றன.

தமிழீழப் பெண்களின் புரட்சிக்கு வித்திட்டவர்களின்; நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில்; அரங்கம் நிறைந்த உறவுகளோடு எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், கவியரங்கத்துடன் காலத்தின் தேவை கருதிய சிறப்புரையும் இடம்பெற்றது.

இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான கிறபுன்டன் மாநில வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டமையானது மீள்எழுச்சியுடன், உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்ததுடன் நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

 

Leave a comment