இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் – அமெரிக்கா வழங்குகிறது

13072 0

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஆயுதங்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகள் தரப்பிலும் அவ்வப்போது நடப்பது வழக்கம்.

ஜனாதிபதி டிரம்ப் அழைப்பின் பேரில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து இந்திய கடற்படையின் கடலோர கண்காணிப்புக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் பொருத்தப்படாத 22 கார்டியன் ரக அதிநவீன ஆளில்லாத விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

இதேபோல் விமானப்படையின் ஆயுத தாக்குதலுக்கு உதவிடும் விதமாக 100 சி.அவெஞ்சர் ரக ஆளில்லாத விமானங்களை வழங்கும்படி இந்திய விமானப்படை அமெரிக்காவை கேட்டுக் கொண்டு இருந்தது. இந்த நவீன ரக ஆளில்லாத விமானங்களின் மொத்த மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.6,500 கோடி) ஆகும். ஆனால் இதுபற்றி எந்த முடிவையும் இதுவரை அமெரிக்க அரசு எடுக்காமல் இருந்தது. தற்போது இந்த ரக ஆளில்லாத விமானங்களை இந்தியாவுக்கு வழங்கிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுபற்றி, அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “இந்தியா தனது விமானப்படையில் நவீன தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. அதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இந்தியாவுடன் ராணுவ பாதுகாப்பில் விரிவாக ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும்” என்றார்.

Leave a comment