பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்க்கும் நிகழ்ந்த கடும் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில், ராயீஸ் கோத் பகுதியில், ஏ.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற அன்சருல் ஷரியா பாகிஸ்தான் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த படையினர், எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து, சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல், மறைவிடத்தில் இருந்து கொண்டு அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே பயங்கரவாத தடுப்பு படையினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு தங்களது துப்பாக்கியால் சரியான பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையின் முடிவில் 5 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியில் 3 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு விட்டனர்.
இந்த சண்டையின்போது பயங்கரவாத தடுப்பு படை வீரர் ஒருவரும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலியான பயங்கரவாதிகளில் அன்சருல் ஷரியா பாகிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஷெகர்யார் என்ற டாக்டர் அப்துல்லா ஹாஸ்மி முக்கியமானவர்.இந்த துப்பாக்கி சண்டையின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.