நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (வயது 62). இவர் லாகூரில் நடந்த கட்சி தொண்டர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஆகிய இருவரும் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
நவாஸ் ஷெரீப்பிற்கு எதிரான ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும்பொழுது ஷெரீப் சகோதரர்கள் என்னை கொல்ல திட்டமிட்டனர் என்றும் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
எனது ஆதரவை பெறுவதற்காக தற்பொழுது என்னுடன் தொடர்பு கொள்ள நவாஸ் முயற்சித்து கொண்டிருக்கிறார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
அவர்கள் பெனாசீர் பூட்டோ (சர்தாரியின் மனைவி) மற்றும் எனக்கு செய்த விசயங்களை நான் இன்னும் மறக்கவில்லை. நாங்கள் அவர்களை மன்னித்தோம். ஆனால் இன்னும் அவர் எனக்கு துரோகம் செய்து வருகிறார். மெமோகேட் சர்ச்சையில் என்னை ஒரு தேசதுரோகியாக முத்திரை குத்துவதற்காக நவாஸ் ஷெரீப் நீதிமன்றம் செல்கிறார் என்றும் சர்தாரி பேசியுள்ளார்.
பனாமா பேப்பர் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற அமர்வு நவாசை பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தது. அதில் இருந்து நவாசை சர்தாரி தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார்.