கரும்பு விவசாயிகளுக்கு, நிலுவைதொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

17567 0
கரும்பு விவசாயிகளுக்கு, தனியார், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மொத்தம் ரூ.1,701.35 கோடி பாக்கி வைத்துள்ளன. இவற்றை பெறுவதற்கு விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் பயன் அளிக்காத நிலையில், கடந்த 14-ம் தேதியன்று தமிழக அரசு-விவசாய அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத்தொகையில் டன்னுக்கு ரூ.125 வீதம் ரூ.110 கோடியும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.198.44 கோடியில் ரூ.12.26 கோடியும் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

தீபாவளி முடிந்து 4 நாட்களாகியும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து விரைவாக வசூலித்து வழங்கும்படி பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாய அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், எந்த பயனும் ஏற்படவில்லை.

போதிய கொள்முதல் விலை வழங்கப்படாததாலும், நிலுவைத்தொகை அதிகரிப்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு வேறு பயிர்களுக்கு சென்று விட்டனர். இதனால் நடப்பாண்டில் தமிழகத்தில் கடுமையான சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை மாற வேண்டுமானால் கரும்பு சாகுபடி லாபமானதாக மாறவேண்டும். அதற்காக சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை இந்த மாத இறுதிக்குள் பெற்றுத்தரவும், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment