தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதைவிட, நாட்டிலுள்ள வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதன் பக்கம் கவனத்தைச் செலுத்துவது சிறந்தது எனவும் அரசியலமைப்பொன்று அவசியம் இல்லையெனவும் தமது சங்க சபை தீர்மானம் எடுத்துள்ளதாக கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி சங்க சபையின் கோட்டே பிரிவின் போஷகர் பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்தார்.
இன்று (22) கோட்டே ரஜமகா விகாரை சங்க சபையின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு கூறினார்.
அரசியலமைப்பு முன்மொழிவுகள் தொடர்பில் இன்று கூடிய சங்க சபை ஆராய்ந்தது. இதிலுள்ள விடயங்களை நன்கு ஆராய்ததன் பின்னரேயே இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் பிரச்சினையைத் தீர்க்க புதிய அரசியலமைப்பு அமைக்கப் போனால் வேறு ஒரு பாரிய பிரச்சினை புதிதாக உருவாகிவிடும். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவையும் தீர்க்கப்பட வேண்டும். தற்போதைய அரசியலமைப்பில் குறைகள் இருப்பதாயின் அவற்றைச் சீர்செய்வதில் தவறில்லையெனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.